இரணியனைக் கொல்வதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருடன் தேவர்களும், முனிவர்களும் கோஷ்டி, கோஷ்டியாக வந்து ஆலோசனையில் ஈடுபட்டதால் இந்த ஸ்தலம் 'திருக்கோஷ்டியூர்' என்று வழங்கப்படுகிறது. 'திருக்கோட்டியூர்' என்றும் அழைக்கப்படும்.
மூலவர் ஊரகமெல்லணையான் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் சௌம்ய நாராயணப் பெருமாள். தாயாருக்கு திருமாமகள் நாச்சியார் என்பது திருநாமம். இந்திரன், கதம்ப மஹரிஷி ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
இக்கோயில் 4 தளங்களுடன் உள்ளது. தரைப்பகுதியில் மூலவர் ஊரகமெல்லணையான் ஸந்நிதியும், தரைக்கு அடிப்பகுதியில் நடனகிருஷ்ணன் ஸந்நிதியும், இரண்டாம் தளத்தில் சௌம்ய நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ள ஸந்நிதியும், மூன்றாம் தளத்தில் பரமபதநாதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ள ஸந்நிதியும் உள்ளது.
திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் திருமந்திர ரகசியத்தை அறிந்துக் கொண்டு, உலக ஜனங்கள் முக்தியடையும் பொருட்டு ராமானுஜர் இக்கோயில் கோபுரத்தின்மீது ஏறி வெளியிட்ட ஸ்தலம். அதனால் வைஷ்ணவர்கள் இந்த ஸ்தலத்தை 'த்வயம் விளைந்த திருப்பதி' என்று அழைக்கின்றனர்.
திருமங்கையாழ்வார் 13, பெரியாழ்வார் 22, பூதத்தாழ்வார் 2, பேயாழ்வார் 1, திருமழிசையாழ்வார் 1, ஆக 39 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|